சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் இயங்கி வரும் இறால் குட்டைகளை அகற்றக் கோரி சிதம்பரம் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட இறால் குட்டைகள் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வருகின்றன. இதனால் குடிநீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, அந்தக் கழிவுநீரை பிச்சாவாரம் காடுகளில் உள்ள கால்வாய்களில் விடப்படுவதால், மாங்குரோவ் காடுகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே, இறால் குட்டைகளை அகற்ற வலியுறுத்தி, பிச்சாவரத்தைச் சுற்றியுள்ள வடக்கு பிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், ராதாவிளாகம், கிள்ளை, பின்னத்தூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடற்கரையோர வாழ்வுரிமை இயக்கத்துடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சிதம்பரம் காந்தி சிலை அருகே கடற்கரையோர வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்மே.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லுமாறு சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் வலியுறுத்தினர்.
எனினும், அவர்கள் கலைந்து செல்லாததால், போராட்டத்தில் ஈடுபட்ட மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.கற்பனைச்செல்வம், ஆர்.ராமச்சந்திரன், ஜி.மாதவன் உள்ளிட்ட 220 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.