பெண்ணைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கூடலூர் காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ். சென்னையில் தங்கியிருந்து வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி (26), கூடலூரில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் கருணாமூர்த்திக்கும் (23) செல்வராணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது தவறான உறவாக மாறியது. இதனை பிரகாஷ் கண்டித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், 18.4.2015 அன்று வீட்டிலிருந்த செல்வராணியை கருணாமூர்த்தி சந்தித்து தனிமையில் இருக்க அழைத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வராணியை தாக்கியுள்ளார். இதில் அவர் மயக்கமடையவே தலையணையால் அவரது முகத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆவினங்குடி போலீஸார், கருணாமூர்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட கருணாமூர்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.