மத்திய அரசு, மரபணு மாற்றக் கடுகுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்த் தேசியப் பேரியக்கம் பொதுச் செயலர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு மரபணு மாற்றக் கடுகுப் பயிருக்கு இசைவு அளித்துள்ளது. மோடி அரசு முதல் முறையாக மரபணு மாற்ற உணவுப் பயிரான கடுகுக்கு இசைவு அளித்துள்ளது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபணு பொறியியல் இசைவுக் குழு கடந்த 11.5.2017 நாளிட்ட அறிவிப்பின் மூலம், இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
மரபணு மாற்றக் கடுகு, சுற்றியுள்ள பிற பயிர்களுக்கும், மண்ணுக்கும் நிலத்தடி நீருக்கும் கேடு விளைவிப்பதோடு, இதை உண்ணும் மனிதர்களுக்குக் கொடிய நரம்பியல் நோய்களை உருவாக்கும் ஆபத்தும் உள்ளது. இந்த மரபணு மாற்றக் கடுகு வகையினம் களைக்கொல்லி தாங்கும் வகையினமாகும். இந்தக் கடுகு விதைகள் முறையாக முளைப்பதற்கு குளுஃபோசினேட் என்ற உயர் கலைக்கொல்லியை இட வேண்டும்.
இந்த களைக்கொல்லி, தாரா கலப்பினக் கடுகைத் தவிர சுற்றியுள்ள பிற தாவரங்களை களையாகக் கருதிக் கொன்றுவிடும். குளுஃபோசினேட் பயன்பாடு மண்ணின் வளத்தைக் கெடுப்பதோடு, நிலத்தடி நீரையும் நஞ்சாக்குகிறது. அப்பகுதி முழுவதும் தேனீக்கள், பட்டாம் பூச்சுகளின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் பயிர்களின் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்படும்.
குளுஃபோசினேட்டை சுண்டெலியின் உடலில் செலுத்தி சோதித்த போது, அதன் நரம்பு மண்டலம், குறிப்பாக மூளை வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டு, இனம் கண்டறிய முடியாத நரம்பியல் நோய்கள் ஏற்பட்டதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஆய்வுகளை மேற்கோள்காட்டி, தொழில்நுட்ப வல்லுநர் குழு 2013-இல் அளித்த அறிக்கை, மரபணு மாற்றக் கடுகுகள் மூலம் கொடிய நரம்பியல் நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு என எச்சரித்தது.
இதற்கு முன்னர், மரபணு பொறியியல் ஏற்பிசைவுக் குழு பி.டி. கத்தரிக்கு அனுமதி வழங்கிய பிறகும், அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் நாடு முழுவதும் ஏற்பட்ட எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு பி.டி. கத்தரிக்கு அனுமதி வழங்க மறுத்தார். இதை எடுத்துக்காட்டாகக் கொண்டு, தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் கவே, மரபிண மாற்றக் கடுகுக்கு அனுமதி அளிக்க மறுக்க வேண்டும்.
ஏனெனில் இந்த அனுமதி மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட மரபணு மாற்ற உணவுப் பயிர்கள் சந்தைப் பயன்பாட்டுக்கு வரிசையில் வந்து நிற்கும் ஆபத்து உள்ளது. எனவே, இந்திய அரசு மரபணு மாற்றக் கடுகுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அறிக்கையில் கி.வெங்கட்ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.