பண்ருட்டி அருகே கைத்தறித் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட சிவலிங்கத்தை வருவாய்த் துறையினர் புதன்கிழமை அப்புறப்படுத்தினர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது காடாம்புலியூர் ஊராட்சி. இங்குள்ள தாமரைக்குளம் எதிரே, கைத்தறித் துறைக்குச் சொந்தமான இடத்தில் காடாம்புலியூர், தெற்கு தெருவைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், பெரிய சிவலிங்கத்தை வைத்து பூஜை நடத்தி வந்தாராம்.
கைத்தறித் துறைக்குச் சொந்தமான இடத்தில் சிவலிங்கம் வைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட சிவலிங்கத்தை அப்புறப்படுத்துமாறு கருணாநிதிக்கு வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, அவர் சிவலிங்கத்தை அகற்றுமாறு வருவாய்த் துறையினரிடம் தெரிவித்தாராம்.
இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை பண்ருட்டி வட்டாட்சியர் விஜய் ஆனந்த், கைத்தறி அலுவலர் வாசுதேவன் மற்றும் போலீஸார் முன்னிலையில் கிரேன் மூலம் சிவலிங்கம் அகற்றப்பட்டு, காடாம்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.