புதுச்சேரி அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்குத் தொடர்பாக மேலும் ஒருவரை கடலூர் மாவட்ட போலீஸார் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமியின் உதவியாளராகப் பணியாற்றி வந்தவர் புதுச்சேரி பிள்ளையார்குப்பைத்தைச் சேர்ந்த வீரப்பன். இவர், கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிலரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக சூர்யா, அன்பு என்ற அன்பரசன், புகழ் என்ற புகழேந்தி ஆகியோரை போலீஸார் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனர். இந்த நிலையில் இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பாகூர் கொம்யூன் பிள்ளையார்குப்பம் ஆறுமுகம் மகன் அமுதன் (28) (படம்) என்பவர் மீது கிருமாம்பாக்கம், ஏனம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே, இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரைத்தார்.
இதனையேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அமுதனிடம் குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது. இதன் மூலமாக வீரப்பன் கொலை வழக்கில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.