கடலூர்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்னா

DIN

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டனர். 

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலையொட்டி, சுமார் 3 மாதங்கள் நடைபெறாமல் இருந்த இந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன், வேளாண்மை இணை இயக்குநர் ச.வேல்விழி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) சு.பூவராகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பெ.ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் அமல்படுத்தக் கூடாதென வலியுறுத்தி, அனைத்து விவசாயிகளும் இணைந்து தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். அவர்களை ஆட்சியர் சமாதானப்படுத்த முயன்றார். மாவட்டத்தில் எந்த இடத்திலும் இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை. மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்ட பிறகே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக, இந்தத் திட்டத்துக்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளதாக அரசுக்கு தெரியப்படுத்துவேன் என்றார். இதையடுத்து விவசாயிகள் தர்னா போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்ந்து, பெண்ணாடம் ஆர்.சோமசுந்தரம் தலைமையில் கரும்பு விவசாயிகள் ஆட்சியரை முற்றுகையிட்டதோடு, தரையில் அமர்ந்து தர்னாவிலும் ஈடுபட்டனர். திவால் அறிவிப்பு வெளியிட்ட ஆலையிடமிருந்து விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை முழுமையாக பெற்றுத்தர வேண்டும். மற்ற ஆலைகளிலும் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இதற்கு ஆட்சியர் பதிலளித்துப் பேசுகையில், திவால் அறிவிப்பு வெளியிட்டுள்ள சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ரூ.56.90 கோடி வழங்க வேண்டியுள்ளது. இந்தத் தொகையை வழங்கிட வேண்டுமென அனைத்து விவசாயிகள் சார்பில் ஆட்சியரின் கையெழுத்துடன் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். விவசாயிகளுடன் மாவட்ட நிர்வாகம் உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார். இதை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

அதன்பின்னர், அத்திப்பட்டு மதிவாணன் தலைமையில் விவசாயிகள் சிலர் தங்களது கழுத்தில் பட்டைநாமம் சின்னத்தை தொங்கவிட்டபடி தர்னாவில் ஈடுபட்டனர். குமராட்சி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 26 ஊராட்சிகளில் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்களும் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து 3 முறை விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டதால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: 

சிறுப்பாக்கம் மணிகண்டன்: டிராக்டர் கடனுக்கு விவசாயிகளுக்கு மத்திய அரசும், காப்பீட்டு நிறுவனமும் உத்தரவாதம் அளிக்கும்போது ஏன் விவசாயிகளின் சொத்தையும் அடமானமாகக் கோர வேண்டும்? அவ்வாறு பெறப்பட்ட சொத்து பத்திரங்களை திரும்ப வழங்க வேண்டும். படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோ.மாதவன்: மருதாடு 4 வழிச் சாலைப் பணிக்காக விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் நிலங்களைப் பறிக்கக் கூடாது. பேருந்துகளில் நிலவும் கட்டண குளறுபடிகளை களைய வேண்டும். விவசாயிகள் பெயரில் சர்க்கரை ஆலைகள் பெற்ற கடனை அந்த ஆலைகளின் பெயருக்கே மாற்ற வேண்டும். 

தட்சிணாமூர்த்தி: மலட்டாற்றுடன் பெண்ணையாற்றை இணைக்க நடவடிக்கை தேவை.

வி.கே.குமரகுரு: மாவட்டத்திலுள்ள பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேர்தலுக்குப் பின்னர் கூட்டுறவு கடன்கள் ரத்தாகிவிடுமென பல செயலர்கள் நினைத்தார்கள். 

எனவே, ஒவ்வொரு சங்கத்திலும் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை விவசாயிகளுக்கே தெரியாமல் அவர்களது கணக்கில் கடன் பெற்றுள்ளனர். எனவே, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்துவதோடு, கடன் பெற்ற விவசாயிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.ரவீந்திரன்: என்எல்சியிடம் நிதி பெற்று மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் செறிவூட்டும் பணிகள் நடைபெறாததால் சுமார் 80 ஆயிரம் கிணறுகள் வறண்டுவிட்டன. விவசாய நிலங்களை வளர்ச்சிப் பணிகள் என்றப் பெயரில் கையகப்படுத்தும்போது அவர்களது ஒப்புதலைப் பெற்று 4 மடங்கு விலை வழங்க வேண்டும்.

கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன்: விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். 

இவ்வாறு விவசாயிகள் கூறிய கருத்துகளுக்கு, மாவட்ட ஆட்சியர், துறை அலுவலர்கள் பதிலளித்தனர்.

கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு

குறைதீர் கூட்டத்தின்போது விருத்தாசலம், குறிஞ்சிப்பாடியின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் கண்காணிப்பாளர் மீது ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் மிகவும் செல்வாக்கு பெற்றவர் என துறை அலுவலரே தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த ஆட்சியர், அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

ஆட்சியரகத்தில் நெகிழிப் பயன்பாடு: நெகிழிப் பொருள்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற துறை அலுவலர்கள், விவசாயிகளுக்கு நெகிழி கப்புகளில் டீ வழங்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள் - 2024

நடிகர் சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

அம்பேத்கர் பிறந்தநாள்: சமூக நீதி கிடைக்க உறுதி ஏற்போம் -தவெக தலைவர் விஜய்

SCROLL FOR NEXT