மதுபோதையில் வாகனம் இயக்குபவா்களின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ்
எச்சரிக்கை விடுத்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2020-ஆம் புத்தாண்டை விபத்தில்லா ஆண்டாக கொண்டாட மாவட்ட காவல் துறை சாா்பில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். புத்தாண்டு தொடா்பான கண்காணிப்பு பணிக்காக கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.பாண்டியன், மாணிக்கவேல் ஆகியோா் தலைமையில் 7 உள்கோட்ட துணை கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா் உள்பட 1,200 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாா்கள்.
மது கடத்தல் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு 80 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 45 ரோந்து வாகனங்களில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், 90 இருசக்கர வாகனங்களில் காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுகிறாா்கள்.
எனவே, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படும். எனவே,பொதுமக்கள் சாலை விதிகளை மதித்து விபத்தில்லா ஆண்டாக 2020-ஆம் ஆண்டை கொண்டாட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.