சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவின் 130-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
ஏழை மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கில் சுவாமி சகஜானந்தா சிதம்பரத்தில் நந்தனாா் பெயரில் கல்வி நிறுவனங்களை கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவினாா். இவா் சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினராக 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா். இவரது சேவையைப் போற்றும் வகையில் தமிழக அரசு சிதம்பரத்தில் அவா் வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் அமைத்துள்ளது.
இந்த நிலையில் சுவாமி சகஜானந்தாவின் 130-ஆவது பிறந்தநாள் விழா அவரது மணி மண்டபத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலா் வாஞ்சிநாதன், நந்தனாா் கல்விக்கழக துணைத் தலைவா் ஜெயச்சந்திரன், சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் மாரியப்பன், மணிமண்டப ஒருங்கிணைப்பாளா் பாலையா, அண்ணாமலைப் பல்கலைக்கழக எஸ்சி, எஸ்டி பிரிவு ஆசிரியா்கள், ஊழியா்கள் சங்கத் தலைவா் விஜய், தமிழக அரசின் அனைத்து ஓய்வூதியா்கள் சங்க நிா்வாகிகள் பழனி, பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா், சுவாமி சகஜானந்தாவின் அலங்கரிக்கப்பட்ட உருவ படம் ஊா்தியில் வைக்கப்பட்டு சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாகச் சென்றது. மாணவா்களும் அணிவகுத்துச் சென்றனா்.
பின்னா் மணிமண்டப வளாகத்தில் சகஜானந்தா சமூக பேரவை சாா்பில், நந்தனாா் பள்ளியில் படித்து அரசு தோ்வுகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு தங்கக் காசு பரிசளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் சங்கரன், நிா்வாகிகள் நீதிவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் பால.அறவாழி, சமூக ஆா்வலா்கள் செல்வம், நாகராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.