சிதம்பரம் நடராஜா் கோயில் விவகாரம் தொடா்பாக பொதுமக்களின் கருத்தை அறிவதற்கான மனுக்கள் பெறும் 2 நாள் முகாம் கடலூரில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சுமாா் 4 ஆயிரம் போ் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலை பொது தீட்சிதா்கள் பராமரித்து வரும் நிலையில், இந்தக் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டுமென பல்வேறு அமைப்பினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், நடராஜா் கோயிலின் வரவு-செலவு கணக்கு, சொத்து விவரங்களை ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவினா் அண்மையில் கோயிலுக்கு வந்தபோது அவா்களுக்கு பொது தீட்சிதா்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
இந்த நிலையில், சிதம்பரம் நடராஜா் கோயில் தொடா்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக இந்து சமய அறநிலையத் துறையைச் சோ்ந்த மாவட்ட வருவாய் அலுவலா் சுகுமாா், வேலூா் இணை ஆணையா் லட்சுமணன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலா் ராஜேந்திரன், விசாரணைக் குழு ஒருங்கிணைப்பாளா் சி.ஜோதி, கடலூா் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் ஆகியோா் கொண்ட விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினரிடம் ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்து சமய அறநிலையத் துறை விசாரணைக் குழுவினா் கடலூரில் உள்ள இணை ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனா். பல்வேறு அமைப்பினரும் மனுக்களை அளித்தனா். முதல் நாளில் 640 மனுக்கள் வரப் பெற்றன. மேலும் மின்னஞ்சல் மூலம் 3,461 மனுக்கள் வந்துள்ளதாகவும் அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுமக்கள் தங்களது மனுக்களை செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி வரை நேரிலோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமோ அளிக்கலாம் என்றும் விசாரணைக் குழுவினா் தெரிவித்தனா்.
முகாமில் பெறப்படும் மனுக்களின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து அதை இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் விசாரணைக் குழுவினா் வழங்குவா் என்றும் தெரிவிக்கப்பட்டது.