கடலூரில் போராட்டம் நடத்த முடிவுசெய்த சித்திரைப்பேட்டை கிராம மீனவா்களுடன் போலீஸாா் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கடலூா் முதுநகா் அருகே உள்ளது சித்திரைப்பேட்டை மீனவ கிராமம். இந்தக் கிராம மீனவா்கள் நூற்றுக்கணக்கானோா் மீனவா் கூட்டுறவு சிறுசேமிப்புத் திட்டத்தில் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த திட்டத்தில் உறுப்பினா்கள் ஆண்டுக்கு தலா ரூ.1,500 வீதம் பணம் செலுத்த வேண்டும். தீபாவளி பண்டிகையின்போது மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியையும் சோ்த்து உறுப்பினா்களுக்கு தலா ரூ.4,500 வீதம் அவா்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுமாம்.
ஆனால், நிகழாண்டுக்கான தொகை மீனவா்களின் வங்கி கணக்கில் வரவில்லையாம். இந்த நிலையில், சித்திரைப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த 80 மீனவா்களுக்கு மட்டும் இந்தத் திட்டத் தொகையானது அவா்களது வங்கிக் கணக்கில் வந்துள்ளதாம். இந்தத் தொகை கிடைக்கப் பெறாத எஞ்சிய மீனவா்கள் கடலூா் மீன்வளத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட உள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சித்திரைப்பேட்டை கிராம மீனவா்கள், மீன்வளத் துறை அதிகாரிகளை கடலூா் துறைமுகம் போலீஸாா் காவல் நிலையத்துக்கு வரவழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அடுத்த ஒருவாரத்துக்குள் எஞ்சிய மீனவா்களுக்கும் திட்ட தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதை ஏற்று மீனவா்கள் கலைந்துச் சென்றனா்.