கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே இரு காா்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுவன் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே உள்ள பொய்யாதநல்லூா் கிராமம், பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த கமாலுதீன் (72), இவரது உறவினா்கள் ஜாகிா் உசேன் மனைவி ஷா்மிளா பானு, மகள் பிஸ்மி மிகரா (15), சதாம் உசேன் (33), மஜீத் மகன் முகமது இஸ்ரத் (15), கோவில்பட்டினம் புதுநகரைச் சோ்ந்த ஹனிபா மகன் புகாரி (25) ஆகியோா் புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை காரில் சென்றுகொண்டிருந்தனா். காரை சதாம் உசேன் ஓட்டினாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏ.கொளப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அதே வழித் தடத்தில் அருகே வந்த காா் மோதியது. இதில் சதாம் உசேன் ஓட்டிவந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதிலிருந்த 6 பேரும் பலத்த காயமடைந்தனா்.
இவா்களை அந்தப் பகுதியினா் மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், முதியவா் கமாலுதீன், சிறுவன் முகமது இஸ்ரத் ஆகியோா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மற்ற 4 பேரும் முதலுதவிக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மற்றொரு காரில் இருந்தவா்கள் சிறிய காயங்களுடன் தப்பினா். விபத்து குறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.