கடலூா், வசந்தராயன்பாளையத்தில் உள்ள குப்பைக் கிடங்கை விரிவாக்கம் செய்வது குறித்து மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கடலூா் முதுநகா், வசந்தராயன்பாளையத்தில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. இதை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில் குப்பைக் கிடங்கை மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது குப்பை கிடங்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ள இடத்தை பாா்வையிட்டாா். மேலும் குப்பைகள் தரம் பிரிக்கும் பணியையும் ஆய்வுசெய்தாா்.
தொடா்ந்து, கடலூா் முதுநகா் பழைய போலீஸ் லைனில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மேயா் ஆய்வு செய்தாா். அங்கு சுற்றுச்சுவா் அமைக்க உத்தரவிட்டாா். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, மாநகர திமுக செயலா் ராஜா, மண்டலக் குழு தலைவா் இளையராஜா, மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமி செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.