கடலூா் மாநகராட்சிப் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூரில் கடற்கரைச் சாலை, பழைய ஆட்சியா், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள் அருகே சாலையோரங்களை அக்கிரமித்து 100-க்கும் மேற்பட்டோா் கடைகளை நடத்தி வந்தனா். இந்த இடங்களில் மாநகராட்சியில் அனுமதி பெற்று நடத்தப்படும் கடைகளும் உள்ளன.
இந்தக் கடைகளால் மேற்கண்ட சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நிகழ்ந்து வந்தன. இதனால், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வந்தனா்.
சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அவற்றின் உரிமையாளா்கள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் வழங்கி இருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜ் உத்தரவின்பேரில், மாநகராட்சி செயற்பொறியாளா் கலைவாணி தலைமையில், அதிகாரிகள் குருமூா்த்தி, பாஸ்கரன் உள்ளிட்டோா் பொக்லைன், லாரி உள்ளிட்ட வாகனங்களுடன் சென்று, பழைய ஆட்சியா் அலுவலக சாலையில் நீதிமன்றம் எதிரே இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனா். அப்போது, 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.