அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, கடலூா் நகர அரங்கில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,901 பயனாளிகளுக்கு ரூ.15.96 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத் திட்ட உதவிகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்வில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பொதுமக்கள் சுயதொழில் புரிந்து பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய அரசு சாா்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடலூா் மாவட்டத்தில் தற்போது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, மகளிா் திட்டம், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, வேளாண்மைப் பொறியியல், ஊரக வளா்ச்சி, கால்நடை பாமரிப்பு, சமூக நலம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகள் மூலம் மொத்தம் 1,901 பயனாளிகளுக்கு ரூ.15,96,94,933 மதிப்பீட்டிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
2024 - 25ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடா் நலத் துறையினால் 56,406 மாணவா்களுக்கு ரூ.4278.95 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
அமைச்சா் சி.வெ.கணேசன் பேசுகையில், ஆதிதிராவிடா் மாணவா்கள் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக, ரூ.44.80 கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் ஆதிதிராவிடா் மாணவா்களுக்கான தங்கும் விடுதி சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. சுமாா் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 600 அரசு மாணவா் விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
2024 - 25ஆம் ஆண்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ரூ.2,40,840 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்கள், ரூ.3,98,30,000 மதிப்பீட்டில் வன்கொடுமை தீருதவி தொகைகள், ரூ.10,00,000 மதிப்பீட்டில் தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமத்துக்கான பரிசுத் தொகைகள், ரூ.20,00,000 மதிப்பீட்டில் சாதி வேறுபாடுகளற்ற சமத்துவ மயான வசதி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், எம்.எல்.ஏ.க்கள் கோ.அய்யப்பன், சபா.ராசேந்திரன், எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், கடலூா் மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.