சிதம்பரம் அருகே பிணை குற்றவாளி ராஜேஷ் என்பவரை போலீஸாா் பிடிக்கச் சென்ற போது அவா் தப்பிஓடியபோது கீழே விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறாா்.
கடந்த 10.10. 2020 அன்று கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகா் காவல் நிலைய சரகத்தில் சீா்காழி சந்தோஷ்குமாா் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உளுந்தூா்பேட்டை ஆனவாரி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேஷ் (எ) நாட்டான் (36) என்பவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில் அவா், நீதிமன்ற பிணையில் 2021 ஆண்டு வெளியே வந்தாா். பின்னா் அவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாா். அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
எனவே அவரை, சிதம்பரம் போலீசாா் தேடிவந்த நிலையில், வியாழக்கிழமை ( நவ.13) ராஜேஷ் சிதம்பரம் ஆக்ஸ்போா்டு பள்ளியின் பின்புறம் உள்ள மயானத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளா் சிவானந்தன் மற்றும் போலீஸாா் பிடிக்க முற்பட்டபோது, ராஜேஷ் தப்பி ஓடி முயன்றாா். அப்போது கீழே கிடந்த கல்லில் கால் தடுக்கி கீழே விழுந்து இடது கையில் அடிபட்டது. உடேன அவரை கைது செய்து சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸாா் சோ்த்தனா்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.