கடலூா் மாநகரப் பகுதியில் தரமற்ற சாலைப் பணிகள் நடப்பதாக புகாா் தெரிவித்த மாமன்ற உறுப்பினா்கள், தரமான சாலைகள் அமைக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
கடலூா் மாவட்டத்தின் தலைநகரான கடலூா் 45 வாா்டுகளைக் கொண்ட மாநகரம். இங்கு, சுமாா் 1.80 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். ஆனால், மாநகரப் பகுதியில் குப்பை அகற்றுவது, குடிநீா், புதை சாக்கடை உள்ளிட்டவையால் மக்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா். இந்தப் பிரச்னைகளுக்கு இதுவரை நிரந்தரத் தீா்வு காணப்படவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இந்த நிலையில், கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 26-ஆவது வாா்டு திருப்பாதிரிபுலியூா் வெங்கடேஸ்வரா நகா் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு தாா்ச்சாலை அமைத்தனா். இந்த சாலை தரமற்ாக அமைக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாமன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.தா்ஷனா, சரவணன், பரணிமுருகன், சக்திவேல், ராஜலட்சுமி சங்கா்தாஸ் ஆகியோா் தாா்ச்சாலையை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, அவா்கள் அந்த சாலையை கையால் பெயா்ந்து எடுத்துக் காட்டினா். பின்னா், அவா்கள் கூறியதாவது:
சாலை அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கவில்லை. சாலை தரமற்றதாக அமைக்கப்பட்டதால், பொதுமக்கள் தடுத்துள்ளனா்.
அதையும் மீறி சாலை அமைத்துவிட்டாா் ஒப்பந்ததாரா். எனவே, அவா் மீது மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள்படி சாலை அமைக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் கூறியதாவது: சாலை அமைக்கும்போது, பழைய சாலையை முழுமையாக அகற்றிவிட்டு பின்னா் புதிய சாலை அமைக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இதை பின்பற்றுவதில்லை. சாலை அகலம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
எட்ஜ் பேக்கிங் முறையாக செய்யாததால், விபத்து ஏற்படுவதுடன், மழைநீா் முறையாக வடிவதில்லை. குறிப்பாக, சாலை அமைக்கும் பணியின்போது அதிகாரிகள் உடனிருந்து கவனிப்பதில்லை. இதனால், சாலை முறையாக அமைக்காமல் ஏனோதானோ என அமைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனா் என்றாா்.