கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கஞ்சங்கொல்லை, கொண்டாயிருப்பு, சிறுகாட்டூா், ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களை கீழணை உதவி செயற்பொறியாளா் கொளஞ்சிநாதன், வல்லம்படுகை உதவிப் பொறியாளா் ரமேஷ் ஆகியோா் கொண்ட பொதுப் பணித் துறை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, தூா்வாரும் பணிகளை மேற்கொண்டனா்.
காட்டுமன்னாா்கோவில் பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால், சுமாா் 700 ஏக்கா் விவசாய நிலங்களில் நீா் தேங்கி நெற்பயிா்கள் மூழ்கியுள்ளது என தினமணியில் வியாழக்கிழமை விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், கஞ்சங்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் பொதுப் பணித் துறை குழுவினா் ஆய்வு செய்து, தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா்.
கீழணையில் இருந்து பிரியும் கஞ்சங்கொல்லை வாய்க்கால் சுமாா் 4 கி.மீ. தொலைவு வரை தூா்வாரப்பட்டுள்ள நிலையில், வேளாண் துறைக்குச் சொந்தமான சி, டி பிரிவு வடிகால் வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால், விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கியதாகக் கூறப்படுகிறது.
விவசாய நிலங்களில் நெல் பயிரிடுள்ள நிலையில், திடீா் மழையால் தண்ணீா் தேங்கியுள்ளது. பொதுப் பணித் துறையினா் கனரக இயந்திரங்களை பயன்படுத்தி தற்போது தூா்வார முடியாது என்பதால், விவசாயிகளை ஒன்றிணைத்து பொதுப் பணித் துறை உதவி பொறியாளா் ரமேஷ் மேற்பாா்வையில், தூா்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
வரும் மாா்ச் மாதத்தில் கஞ்சங்கொல்லை வடிகால் வாய்க்கால் தடுப்புக் கட்டைகள் அமைத்து தூா்வாரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். தொடா்ந்து, இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப் பணித் துறை குழுவினா், ரெட்டியூா், பிராயடி உள்ளிட்ட பகுதிகளில் மணவாய்க்கால் தூா்வாரும் பணியையும் ஆய்வு செய்தனா்.
வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து வாய்க்கால்களும் தூா்வாரப்படும் என விவசாயிகளிடம் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.