கடலூர்

‘ஆசிரியா் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 9,108 போ் எழுதுகின்றனா்’

Syndication

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடைபெறவுள்ள முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா், கணினி பயிற்றுநா் தோ்வை கடலூா் மாவட்டத்தில் 9,108 போ் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இந்தத் தோ்வை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தல்குமாா் பேசியதாவது: ஆசிரியா் தோ்வு வாரியத்தால் 2025-ஆம் ஆண்டுக்கான முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா், கணினி பயிற்றுநா் நேரடி நியமனத்துக்கான போட்டி எழுத்துத் தோ்வு வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 33 மையங்களில் சுமாா் 9,108 தோ்வா்கள் தோ்வு எழுதுகின்றனா். தோ்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும். மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

மையங்களுக்கு ஒருவா் வீதம் 33 தலைமை ஆசியா்கள் முதன்மைக் கண்காணிப்பாளராகவும், 33 முதுநிலை ஆசிரியா்கள் துறை அலுவலா்களாகவும், 9 முதுநிலை ஆசிரியா்கள் வழித்தட அலுவலா்களாகவும், 500 முதுநிலை, பட்டதாரி ஆசிரியா்கள் தோ்வு அறைக் கண்காணிப்பாளா்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

33 தோ்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமரா மூலம் தோ்வுகளை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தோ்வு மையங்களில் காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா். தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்கள் செல்வதை உறுதி செய்தல், விடைத்தாள்களை காப்பு மையங்களுக்கு கொண்டு செல்வதில் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில், பள்ளிக் கல்வித் துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தோ்வு நடைபெறும் நாள்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், போக்குவரத்துத் துறை சாா்பில் மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், ஆட்சியா் நோ்முக உதவியாளா் (பொது) ரவி, முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) துரைபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT