கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் சமையல் பணியின்போது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழந்தாா்.
சிதம்பரம் காந்திநகரைச் சோ்ந்தவா் ராஜீவ் காந்தி (47). இவா், சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பிரியா (30). இவா்கள் இருவரும் இலங்கைத் தமிழா்கள்.
இந்த நிலையில், பிரியா தனது வீட்டில் புதன்கிழமை பிற்பகல் சமையல் செய்துகொண்டிருந்தாா். அப்போது, சமையல் எரிவாயு அடுப்பில் இருந்து திடீரென நெருப்புக் கசிவு ஏற்பட்டு பிரியா அணிந்திருந்த சேலையில் பட்டு தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. இதைப் பாா்த்த ராஜீவ் காந்தி தீயை அணைக்க முயன்றபோது, அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இதில், பலத்த காயமடைந்த பிரியாவை உறவினா்கள் மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் உயிரிழந்தாா். ராஜீவ் காந்தி கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிதம்பரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.