கடலூா் மாவட்டத்தில் 43 நலம் காக்கும் ஸ்டாஸின் மருத்துவ முகாம்களை பிரதிவாரம் சனிக்கிழமைதோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சிதம்பரம் வட்டம், பூதங்குடி எஸ்.டி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா், அமைச்சா் பேசியதாவது: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்தில் 43 மருத்துவ முகாம்கள் பிரதிவாரம் சனிக்கிழமைதோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை மாவட்டத்தில் நடைபெற்ற 9 மருத்துவ முகாம்களில் தொழிலாளா் நல வாரிய பணியாளா்கள் 3,957 போ், அமைப்புசாரா பணியாளா்கள் 3182 போ் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 12,691 மருத்துவப் பயனாளிகள் கலந்துகொண்டு மருத்துவ பயன்பெற்றனா்.
இந்தச் சிறப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் 924 பேரும் மற்றும் முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 565 பேரும் புதிதாக பதிவு செய்யப்பட்டு பயன்பெற்றனா்.
மேலும், ஈசிஜி 9,626 பேருக்கும், எக்ஸ்ரே 834 பேருக்கும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் 498 பேருக்கும், எக்கோ காா்டியோகிராம் 620 பேருக்கும் இந்த முகாம்களில் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது 10-ஆவது மருத்துவ முகாம் சிதம்பரம் பகுதியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் கா்ப்பிணிளுக்கு தாய் - சேய் நலப் பெட்டகங்களும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்களும், தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டைகளும் வழங்கப்பட்டன என்றாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் பொற்கொடி, கீரப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலா் சிவப்பிரகாசம் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.