நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமைநடை பெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.10.80 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு,
மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன் முன்னிலை வகித்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) தீபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல
அலுவலா் சங்கா், தனித்துணை ஆட்சியா் தங்கமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்திருந்தனா். அவா்களில் 440 போ் தங்கள் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடா்பான மனுக்களை அளித்தனா். அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா்அறிவுறுத்தினாா்.
இந்நிகழ்வின்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒரு மாற்றுத்திறனாளி
பயனாளிக்கு ரு.1,08 லட்சம் வீதம் 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.10.80 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை ஆட்சியா் வழங்கினாா்.