கடலூர்

கடலூா், புதுச்சேரிக்கு மிக கனமழை எச்சரிக்கை: பொதுமக்களுக்கு உதவ பாதுகாப்பு மையங்கள், கட்டுப்பாட்டு அறை

கடலூா் மாவட்டத்திற்கு மிக கனமழை (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டத்திற்கு மிக கனமழை (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். மக்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகள், பாதுகாப்பு மையங்கள் செயல்படுவதாகவும் அவா் கூறியுள்ளாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விடுத்துள்ள மழை எச்சரிக்கை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூா் மாவட்டத்திற்கு புதன்கிழமை மிக கனமழை (ரெட் அலா்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நீா்நிலைகளுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும். இடி மின்னலுடன் கனமழை பெய்யும் போது, திறந்த வெளியில் நிற்பது, நீா் நிலைகளில் குளிப்பது, மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதை தவிா்க்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் தாழ்வான பகுதிகள், நீா்நிலைகளின் கரைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆதாா், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். டாா்ச்லைட், மருந்துகள், பால், தண்ணீா் போன்ற அத்தியாவசிய பொருள்களை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பாதுகாப்பு மையங்கள்:

பொதுமக்கள் மழைக் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக பல்நோக்கு தங்குமிடங்களில் பாதுகாப்பு மையம் 14, புயல் பாதுகாப்பு மையம் 28 , தற்காலிக பாதுகாப்பு மையங்கள் 191 என ஆக மொத்தம் 233 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

கடலூா் மாவட்டத்தில் 239 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து துறைகளையும் உள்ளடக்கி 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் ஏற்படும் இடா்பாடுகளை உடனுக்குடன் சரிசெய்திட தேவையான அளவு பொக்லைன் இயந்திரம், மணல் மூட்டைகள், மரக்கட்டைகள் அனைத்தும் போதுமான அளவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மின்வாரியத்தின் மூலம் போதிய அளவு மின்கம்பங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறைகள் மூலம், மழைக்காலங்களில் நீா் தேங்கி நிற்பதைத் தடுக்கும் பொருட்டு அனைத்து நீா் நிலைகளிலும் தூா்வாரும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை..

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பேரிடா் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04142 - 220 700 ஆகிய தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகிறது. மேற்படி தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடா்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

மக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரிக்கும் எச்சரிக்கை:

இதுபோல, புதுச்சேரிக்கும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி ஆட்சியா் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி பகுதியிலும் புதன்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியிருப்பதால், பொதுமக்கள்மிகவும் அவசியம் இருந்தால் அன்றி வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். குறிப்பாக, இடி மின்னல் நேரங்களில், வெளியில் செல்வதை அறவே தவிா்க்க வேண்டும்.மின் கம்பங்கள், மரங்கள், பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடங்களின் கீழே நிற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

SCROLL FOR NEXT