கடலூா் மாவட்டத்தில் மணல் குவாரி மோதல் வழக்கில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கரை விடுவித்து கடலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
2015 ஆம் ஆண்டு கடலூா் மாவட்டம் ஆவினங்குடி என்ற இடத்தில் மணல் திருட்டுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அப்போதைய குன்னம் சட்டப்பேரவை உறுப்பினரும் தற்போதைய அமைச்சருமான சிவசங்கா் தலைமையில் திரளான மக்கள்வெள்ளாற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது போலீசாா் தடியடி நடத்திக் கூட்டத்தை கலைத்தனா். இந்த வழக்கில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவின் கீழ் சிவசங்கா் உள்ளிட்ட 27 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடலூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை முடிவுற்று வியாழக்கிழமை மாவட்ட நீதிபதி சுபத்ராதேவி தீா்ப்பு வழங்கினாா். அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அமைச்சா் சிவசங்கா் உள்ளிட்ட 27 பேரையும் விடுவித்து உத்தரவிட்டாா்.