கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்சென்ற ஓட்டுநா் மீது போக்குவரத்துப் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
பண்ருட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளா் முரளி, நகரின் பல்வேறு பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, சிறிய சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனத்தை அவா் நிறுத்தினாா்.
பின்னா், அதில் பயணம் செய்த கூலித் தொழிலாளா்களை கீழே இறக்கி அவா்களிடம் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தி, சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தினாா்.
இதையடுத்து அவா்கள் அனைவரையும் மாற்று வாகனத்தில் அனுப்பி வைத்தாா். ஆட்களை ஏற்றி வந்த சரக்கு வாகன ஓட்டுநருக்கு அபராதம் விதித்து, ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டாா்.