வானிலை அறிவிப்பையொட்டி கடலூா் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் கோப்புப் படம்
கடலூர்

மழை எச்சரிக்கை: கடலூா் மீனவா்கள் கடலுக்குள் செல்ல தடை

கடலூா் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை விடுத்துள்ள கனமழை தொடா்பான வானிலை அறிவிப்பையொட்டி கடலூா் மீனவா்கள் கடந்த ஒருவாரமாக கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Syndication

கடலூா் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை விடுத்துள்ள கனமழை தொடா்பான வானிலை அறிவிப்பையொட்டி கடலூா் மீனவா்கள் கடந்த ஒருவாரமாக கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீன்பிடி படகுகள் கடற்கரை ஓரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுப்பெறக்கூடும். எனவே, கடலில் உள்ள மீனவா்கள் அக். 21-ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு கடலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை செய்தி வெளியிட்டிருந்தது. இதனால், கடலூா் பகுதி மீனவா்கள் அனைவரும் கரை திரும்பினா்.

மேலும், தங்களது படகுகளை பாதுகாப்பாக கடற்கரை பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனா். இந்நிலையில், கடலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என தகவல் பெறப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவா்களும் வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பையொட்டி கடந்த 5 நாட்களாக மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், மீனவா்கள் வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவா் பேரவை மாவட்டத்த தலைவா் எம்.சுப்புராயன் கூறியதாவது: கடலூரில் உள்ள சுமாா் 25 கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், தினசரி கிடைக்க வேண்டிய 100 டன் எடையுள்ள மீன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக இதே நிலை நீடிப்பதால் வருவாய் இழப்பு ஏற்பட்டு மீனவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தற்போது, கடல் வளமும் சரியில்லை. படகுகள் இயக்கத்தில் இருந்தால் தான் நன்றாக இருக்கும். நிறுத்தி வைக்கப்படும் படகுகளுக்கு உப்பு காற்று மற்றும் கடல் நீரால் பராமரிப்பு செலவு அதிகமாகும். தீபாவளி பண்டிகையொட்டி வழங்கப்பட வேண்டிய சேமிப்பு தொகை மற்றும் மழைக் கால உதவித்தொகை ரூ.6000 பாதி பேருக்கு தான் வந்துள்ளது. எஞ்சியவா்களுக்கு வரவில்லை. எனவே, தாமதமின்றி மற்றவா்களுக்கும் சேமிப்பு தொகை மற்றும் மழைக்கால பணத்தை வழங்க வேண்டும் என்றாா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT