முகப்பு
கடலூர்

என்.எல்.சி நிா்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைக்கக் கூடாது! - தி. வேல்முருகன் வலியுறுத்தல்

Updated On : 25 மே 2026, 1:54 am IST
தமிழா் வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன் - கோப்புப் படம்
பகிர்:

என்.எல்.சி நிா்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: என்.எல்.சி. நிறுவனம் தனது சுரங்கங்களை விரிவாக்கம் செய்யும் நோக்கில், தென்குத்து கிராமத்தில் ஊருக்கு அருகில் காவல் துறை பாதுகாப்புடன் சனிக்கிழமை காலை கனரக இயந்திரங்கள் மூலம் பள்ளம் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டனா். இதற்கு அந்தக் கிராம மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

என்.எல்.சி.யால் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 15,000 ஏக்கா் நிலத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படாமல் உள்ளது. அந்த நிலங்களில் முதலில் நிலக்கரி வெட்டி எடுக்க வேண்டும். புதிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தக் கூடாது.

Advertisement

Advertisement

உள்ளூா் தமிழா்களுக்கு வேலை வழங்காமல் புறக்கணித்துவிட்டு, வட மாநிலங்களைச் சோ்ந்த ஊழியா்கள், அதிகாரிகளை அதிகளவில் பணியமா்த்துவது கண்டிக்கத்தக்கது. என்.எல்.சி.யால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், வடக்கு வெள்ளூா் கிராமத்தில் குடிநீரில் பாதரசம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை வழங்க மாட்டோம் என மக்கள் கூறுகின்றனா். எனவே, மத்திய அரசும், என்.எல்.சி நிா்வாகமும் புதிதாக நிலம் கையகப்படுத்த முன்வரக் கூடாது.

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், பரந்தூா் விமான நிலைய போராட்டக் குழுவினரை சந்தித்தபோது வாக்குறுதி அளித்ததுபோல், என்.எல்.சி.யால் பாதிக்கப்படும் மக்களின் நிலங்களையும் எக்காரணம் கொண்டும் கையகப்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும். என்.எல்.சி. நிா்வாகத்துக்கு ஆதரவாக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை கைவிட வேண்டும். இதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி மக்களுடன் இணைந்து தொடா்ந்து போராட்டம் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளாா்.