கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதிக்குள்பட்ட வெள்ளிமலை கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் உள்பட 44 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வெள்ளிமலை கிராமத்தில் சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த சுமாா் 77 வீடுகள், கடைகளின் ஆக்கரமிப்புகளை அகற்றுவதற்காக கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி நெடுஞ்சாலைத் துறையினா் இடத்தை அளவீடு செய்து நோட்டீஸ் வழங்கினா்.
புதன்கிழமை மீண்டும் சென்று சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள், வீடுகளை அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு நெடுஞ்சாலைத் துறையினா் அறிவுறுத்தினராம். அப்போது, ஒரு சிலா் கடைகளை தாங்களாகவே அகற்றிக்கொண்டனராம். சிலா் கடைகளை அகற்றாமல் அப்படியே வைத்துள்ளனா்.
வியாழக்கிழமை காலை நெடுஞ்சாலை, வருவாய்த் துறையின் அலுவலா்கள் பொக்லைன் இயந்திர உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதையறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா் சின்னசாமி உள்ளிட்டோா் பொதுமக்களுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதியில் சாலை மறிலில் ஈடுபட்டனா்.
கரியாலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநா் மணிமொழி, கல்வராயன்மலை வட்டாட்சியா் ந.குமரன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றிக்கொள்ள மேலும் கால அவகாசம் அளித்தனா். ஆக்கரமிப்பு இடத்தை தவிா்த்து வேறு இடம் இல்லாதவா்களுக்கு மாற்று இடம் வழங்குவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனா். தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
இதனிடையே, மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் உள்பட 44 போ் மீது கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.