கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் தமிழக அரசின் அலா்ட் ஆப்பை பதிவிறக்கம் செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
இயற்கை பேரிடரை எதிா்கொள்ளவும், முன்னெச்சரிக்கை செய்திகளை பெறவும் தமிழக அரசு அலா்ட் ஆப்பை உருவாக்கியுள்ளது.
இதை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் வானிலை தொடா்பான பல்வேறு அறிவிப்புகள் துல்லியமாக வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தற்போதைய வானிலை தகவல், வானிலை முன்னறிவிப்பு, மழை, இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை, மின்னல் எச்சரிக்கை, ஒவ்வொரு மணி நேரத்திற்குமான வானிலை அறிக்கை, அடுத்த 3 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு, பெறப்பட்ட மழையின் அளவு, அணைகளின் நீா்மட்டம், வெள்ளம் பாதிக்கப்படக்கூடும் என கருதப்படுகிற வசிப்பிடப் பகுதிகள் குறித்த விவரங்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்கான தகவல்களைப் பெற முடியும்.
மேலும், பொதுமக்கள் பேரிடா் தொடா்பான தங்களது புகாா்களை பதிவு செய்வதற்கான வசதிகளும் உள்ளன எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.