லிங்காரெட்டிபாளையம் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அளித்த விவசாயிகளுக்கு அதற்கான தொகை வழங்கப்படாததற்கு ஊழலே காரணம் என்று திமுக குற்றம் சாட்டியது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கரும்பு விவசாயிகள் பிரச்னை தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற விவாதம்:
சிவா (திமுக): லிங்காரெட்டிபாளையம் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கொடுக்கப்படாமல் இருக்கும் தொகை எவ்வளவு? எத்தனை மாதங்களுக்கான கரும்புக்கான தொகை தரப்படவில்லை?
அமைச்சர் கமலகண்ணன்: சேவை மட்டும்தான் எங்கள் வேலை. கரும்பு வாங்குவது, நிதி தருவது ஆலையின் பணி. விவசாயிகளுக்கு கரும்பு அளித்ததால் ரூ.19 கோடியே 11 லட்சத்து 19 ஆயிரம் வரை பாக்கி உள்ளது. குறிப்பாக, 24 மாதம் வரை பாக்கி வைத்துள்ளனர். ஒவ்வொரு பருவத்துக்கும் நிலுவைத்தொகை படிப்படியாக தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சிவா: அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையை நடத்த இயலாத சூழல் உள்ளது. கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளனர். விவசாயிகள் கரும்பு பயிரிடுவதை தவிர்க்க தொடங்கி விட்டனர். காலதாமதம் மிகவும் தவறு. அரசு நல்லது செய்யவில்லை. விவசாயிகளுக்கு கேடு செய்கிறீர்கள்.
அமைச்சர் கந்தசாமி: ஏஎப்ஃடி பஞ்சாலை போல ஆகிவிட்டது. சொத்தை விற்றாலும் அடைக்க முடியாது.
சிவா: யார் சொத்துகளை முறைகேடு புரிந்தது? இந்த நிலைக்கு ஊழல் தான் காரணம்.
முதல்வர் நாராயணசாமி: ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளுக்கு தர வேண்டிய நிதியில் ஒரு பகுதியை தந்துள்ளோம். பணம் நிலுவை உள்ளது. சர்க்கரை ஆலையை பொருத்தவரை இந்தியா முழுக்க இப்
பிரச்னை உள்ளது. சர்க்கரை விலை குறைந்து விட்டது. நிதி தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அமைச்சர் கந்தசாமி: சர்க்கரை தயாரித்து மட்டும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் லாபம் கொண்டு வர முடியாது. அடுத்து பவர் யூனிட் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம்.
சிவா: கரும்பாலையை நடத்த தனியாக ஆலோசனை நடத்தலாம். விவசாயிகளிடம் வாங்கிய கரும்புக்கு பணம் தரவில்லை. அதை முதலில் கவனிக்க வேண்டும்.
அமைச்சர் கமலகண்ணன்: கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஆண்டு ஒரு கிலோ உற்பத்தி விலை ரூ.76. அதே நேரத்தில் சந்தை விலை ரூ.40. கூடுதல் செலவு செய்யும் வகையில் நிர்வாகம் உள்ளது.
அன்பழகன்: புதுச்சேரியில் உள்ள சாராய ஆலைக்கு வெளிமாநிலத்திலிருந்து கூடுதல் விலைக்கு கமிஷனில் மொலாசஸை வாங்குகிறீர்கள். சர்க்கரை ஆலைக்கு மொலாசஸை குறைந்த விலைக்கு கொடுக்கிறார்கள்.
அமைச்சர் கந்தசாமி: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.