புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ஒரு சிறப்பு மையம் நிறுவப்பட உள்ளது.
இதற்கான ஒப்புதலை ஜிப்மரின் அதிகாரக் குழு வழங்கியுள்ளது. சுமார் ரூ. 590 கோடி மதிப்பில் உருவாகும் இந்த மையம் சர்வதேச தரத்தில் அமைய உள்ளது. இந்த மையம் செயல்படும் போது தென்னிந்தியாவை சேர்ந்த பெரும்பான்மையான மக்களுக்கு மிகப்பெரும் வரமாக அமையும்.
200 படுக்கை வசதி
சிறுநீரகம், கல்லீரல், இருதயம், கணையம், எலும்பு மஞ்ஞை உள்ளிட்ட பலதரப்பட்ட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை இந்த மையம் மூலம் நடைபெறும். இதில் மிக முக்கியமான 7 மருத்துவத் துறைகள் மற்றும் உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவைச் சிகிச்சையை சார்ந்த மேலும் 7 துறைகள் இணைந்து செயல்படும்.
இந்த மையத்தில் 200 படுக்கை வசதிகள் மற்றும் 65 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் இடம்பெறும். இந்த மையத்தின் மூலம் உறுப்புகள் பிற மருத்துவமனைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும்.
மேலும், மருத்துவர்கள் மற்றும் உபமருத்துவ நிபுணர்களுக்கு உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவைச் சிகிச்சையில் சிறப்பு பயிற்சி வழங்கும் மையமாகவும் செயல்படும். மேலும், உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவைச் சிகிச்சையில் தேவையான ஆராய்ச்சிகளையும் இந்த மையம் மேற்கொள்ளும்.
இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் பரிஜா கூறியதாவது:
சிறப்பு மையத்தை திறம்பட நிறுவும் வகையில் ஒரு உயர்நிலை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு உறுப்பு மாற்று சிகிச்சை மையத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகள், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை பரிந்துரைக்கும்.
இந்தக் குழுவில் தில்லி கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவன இயக்குநர் மு.சரின், இந்திய அரசின் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று குழுமத்தின் இயக்குநர் விமல் பண்டாரி, லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் முகமது ரெலா, லண்டன் பாப்ஒர்த் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை மைய இணை இயக்குநர் ஜெயன் பரமேஸ்வர், ஆமதாபாத் சிறுநீரகவியல் ஆராய்ச்சி மையத் தலைவர் பிரன்ஞ்சல் மோடி மற்றும் சென்னை பிரான்டியர் லைப் லைன் மருத்துவமனை தலைவர் மு.ஆ.செரியன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றார்.
பல உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மைய செயலாளர் பிஜு பொட்டகாட் கூறுகையில், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையின் நவீன சிகிச்சை முறைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையை ஜிப்மர் வெகுவிரைவில் தயாரித்து அளிக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.