புதுவை மாநிலத்தில் தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சென்டாக் மூலம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தி நிரப்பப்படுகின்றன. இவற்றுக்கான கல்விக் கட்டணத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டண நிர்ணயக் குழு அறிவிக்கும். ஆனால், கடந்தாண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
அதனால், 2015-16-ம் கல்வி ஆண்டில் பெறப்பட்ட கட்டணத்தையே செலுத்தலாம் என்று கட்டணக் குழு அறிவித்திருந்தது. அதன்படி, மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தி அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்தனர்.
அதிகக் கட்டணம் வசூல்
எனினும் சில கல்லூரிகள் அதிக கட்டணம் பெற்றதாக புகார் இருந்து வருகிறது. இதற்கிடையே, கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவர் நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான குழு சம்பந்தப்பட்ட மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது, கல்லூரி கட்டமைப்பு, வசதி, கல்வித் தரம் உள்ளிட்டவை குறித்த பல்வேறு தகவல்களை கட்டணக் குழு சேகரித்தது.
அதன் அடிப்படையில் நீதிபதி ராஜேஸ்வரன் கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, அதற்கான பரிந்துரை கடிதத்தை சுகாதாரத் துறைக்கு அனுப்பியுள்ளார்.
அதில், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3.13 லட்சமும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரிக்கு ரூ.2.99 லட்சமும், பிம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3.35 லட்சமும், மாஹே பல் மருத்துவக் கல்லூரி மற்றும் வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரிக்கு தலா ரூ.79 ஆயிரம் என கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, இந்திராணி செவிலியர் கல்லூரி, மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி, பிம்ஸ் செவிலியர் கல்லூரி மற்றும் சபரி செவிலியர் கல்லூரிக்கு தலா ரூ.33 ஆயிரமாகவும், பத்மாவதி செவிலியர் கல்லூரி, ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லூரி மற்றும் ராக் செவிலியர் கல்லூரிக்கு ரூ.37 ஆயிரமாகவும் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும்போது, தனியார் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் குறித்த விவரம் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.