மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர முடியாததால் புதன்கிழமை சென்டாக் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மருத்துவ பட்டமேற்படிப்புக்கு கல்விக் கட்டணத்தை கட்டண நிர்ணணயக் குழு அறிவித்துள்ளது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அக்கட்டணத்தைவிட அதிகமாக கேட்பதால், இடம் பெற்ற மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் சென்டாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு ஒதுக்கீடாக பெற்ற 162 இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த கடந்த 4, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் அறிவிக்காமல் நடைபெற்ற கலந்தாய்வில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் 76 இடங்கள் மட்டும் நிரம்பின.
சென்டாக் மூலம் தேர்வு பெற்ற மாணவர்கள் அந்தந்த மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான கடைசி நாளாக 17-ம் தேதி புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.3 லட்சம் கல்விக் கட்டணமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாணவர்கள் தொடர்புடைய கல்லூரிகளுக்கு சென்று அரசு அறிவித்த கல்விக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். அதனை தனியார் கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது.
அதற்கு மாறாக, ரூ.38 லட்சம் முதல் ரூ.48 லட்சம் வரை செலுத்தினால் மட்டுமே கல்லூரியில் சேர முடியும் என கல்லூரி நிர்வாகம் கூறியதாகத் தெரிகிறது.
சில மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
இதுதொடர்பாக மாணவர்கள் சென்டாக் அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது அதிகாரிகள், கலந்தாய்வு நடத்துவது மட்டுமே தங்களுடைய வேலை என்றும், மாணவர்களின் கோரிக்கையை அரசிடம் தெரியப்படுத்துமாறும் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த
100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் சென்டாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களிடம் சென்டாக் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கட்டண வரைவோலையை வாங்கிக் கொள்வதாக சென்டாக் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கேட்கின்றனர். இல்லையென்றால் கல்லூரியில் சேர்க்க மாட்டோம் என்று கூறுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகே 2-ம் கட்ட கலந்தாய்வை சென்டாக் நிர்வாகம் நடத்த வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்றனர்.
வரைவோலை வாங்க
சுகாதாரத் துறை உத்தரவு
கல்விக் கட்டண வரைவோலையை காண்பித்த பின்னரும் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களைச் சேர்க்க கல்லூரி நிர்வாகங்கள் மறுப்பதாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, கல்லூரிகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டண வரைவோலைகளை சென்டாக் ஒருங்கிணைப்பாளரே மாணவர்களிடம் இருந்து 19-ம் தேதிக்குள் பெற்று தொடர்புடைய கல்லூரிகளுக்கு அளிக்க வேண்டும் என சுகாதாரத் துறை சார்பு செயலாளர் ஜீவா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.