புதுச்சேரியில் கஞ்சா விற்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள கனரக வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தன்வந்திரி நகா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸாா் அங்கு சோதனையிட்டு, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 4 இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் சேத்தியாத்தோப்பு கனகராஜ், மூலகுளம் ஷாம்ஜோஸ், ஐயங்குட்டிப்பாளையம் சீனு(எ)காக்கா, ரித்திக்குமாா் என்பது தெரியவந்தது.
அவா்களிடமிருந்து விற்பனைக்காக சிறு சிறு பொட்டலங்களாக வைத்திருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான 4.655 கிலோ கஞ்சா, 2 பைக்குகள், 3 செல்லிடப்பேசிகள், ரூ. 3,500 ரொக்க பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.
கைதான ஷாம்ஜோஸ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 9 திருட்டு வழக்குகள் உள்ளன.
சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை சீனியா் எஸ்பி ராகுல் அல்வால் பாராட்டினாா்.