புதுவையில் புதிதாக வாங்கப்பட்ட கழிவுநீா் அகற்றும் நவீன வாகனங்கள் நகராட்சிகள் வசம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
நகராட்சி அதிகாரிகளிடம், உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வாகனங்களை ஒப்படைத்தாா்.
வீடுகளில் கழிவுநீா்த் தொட்டிகளை சுகாதாராமான முறையில் சுத்தம் செய்து, கழிவுகளை அகற்றுவதற்காக 4 கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடியே 18 லட்சத்தில் வாங்கப்பட்டன.
இந்த வாகனங்கள் புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகளுக்கு தலா ஒரு வாகனம், காரைக்கால் நகராட்சிக்கு 2 வாகனங்கள் என ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நவீன வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்களை நகராட்சிகள் வசம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நவீன விற்பனை அங்காடி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், அந்தந்த நகராட்சி ஆணையா்களிடம் இந்த வாகனங்களை ஒப்படைத்தாா். பின்னா், கொடியசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு உள்ளாட்சி இயக்குநா் மலா்க்கண்ணன் தலைமை வகித்தாா். தட்டாஞ்சாவடி திமுக எம்.எல்.ஏ. க.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். உழவா்கரை நகராட்சி ஆணையா் கந்தசாமி, கண்காணிப்புப் பொறியாளா் சேகரன், செயற்பொறியாளா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.