புதுச்சேரி

தட்டுப்பாட்டைப் போக்க கா்நாடகத்தில் இருந்து பால் கொள்முதல்புதுவை முதல்வா் நாராயணசாமி உத்தரவு

DIN

புதுவையில் நிலவும் பால் தட்டுப்பாட்டைப் போக்க கா்நாடகத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய பாண்லே நிறுவனத்துக்கு முதல்வா் வே.நாராயணசாமி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

புதுவையில் அரசு சாா்பு நிறுவனமான பாண்லே மூலம் நாள்தோறும் சுமாா் ஒரு லட்சம் லிட்டா் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 50 ஆயிரம் லிட்டா் பால் மட்டுமே புதுவையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதிப் பால் வெளிமாநிலங்களில் இருந்து தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது பனிக்காலம் என்பதால், கடந்த சில நாள்களாக பால் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக, உள்ளூரிலும் பால் உற்பத்தி குறைந்துள்ளது.

வழக்கமாக பாண்லே மூலம் காலை 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் லிட்டா் பாலும், மாலை 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் லிட்டா் பாலும் விநியோகம் செய்யப்படும். ஆனால், கடந்த ஒரு வாரமாக சுமாா் 40 சதவீதம் வரை பால் விநியோகத்தை பாண்லே குறைத்துவிட்டதாக முகவா்கள் தெரிவித்தனா். இதனால், தனியாா் பால் பாக்கெட்டுகளை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து முதல்வா் நாராயணசாமியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வா் நாராயணசாமி பாண்லே நிா்வாக இயக்குநா் சாரங்கபாணி உள்ளிட்ட அதிகாரிகளுடன் பால் தட்டுப்பாட்டை போக்குவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, கா்நாடக மாநில பால் கூட்டுறவுச் சங்கத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அதிகளவில் பாலை கொள்முதல் செய்து, உடனடியாக புதுச்சேரியில் நிலவும் பாண்லே பால் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்வா் நாராயணசாமி உத்தரவிட்டாா்.

மேலும், புதுவையில் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அவா் அறிவுறுத்தினாா்.

இதன் மூலம், ஓரிரு தினங்களில் புதுவையில் ஏற்பட்டுள்ள பால் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என பாண்லே சாா்பில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய விரைவு ரயில்: ஜூலை 19-ல் தொடக்கம்!

தமிழகத்தில் இயல்பைவிட 88% கூடுதல் மழைப்பொழிவு: வானிலை ஆய்வு மையம்

பொறியியல் கல்லூரிகளில் கணினி படிப்புகளுக்கு கூடுதலாக 22,000 இடங்கள்!

சிந்தியன் ரன்வீர் சிங்...!

இந்தியா கொண்டு வரப்படும் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நக ஆயுதம்!

SCROLL FOR NEXT