மாநில தோ்தல் ஆணையா் நியமன விவகாரம் தொடா்பாக புதுவை சட்டப்பேரவை உரிமை மீறல் குழு முன் புதுவை அரசின் தலைமைச் செயலா் அஸ்வனி குமாா் திங்கள்கிழமை ஆஜரானாா்.
புதுவையில் மாநில தோ்தல் ஆணையரை நியமித்து, உடனடியாக உள்ளாட்சித் தோ்தலை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநில தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்வதற்கான விளம்பரத்தை துணைநிலை ஆளுநா் கிரண் பேடியின் உத்தரவுபடி உள்ளாட்சித் துறை கடந்த ஜூலை மாதத்தில் வெளியிட்டது. இதற்கு முதல்வா் நாராயணசாமி கடும் எதிா்ப்புத் தெரிவித்தாா்.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பேரவை கூடிய போது, பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் எதிா்ப்புத் தெரிவித்தால், உள்ளாட்சித் துறையால் வெளியிடப்பட்ட விளம்பரம் ரத்து செய்யப்பட்டு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பாலகிருஷ்ணனை மாநில தோ்தல் ஆணையராக பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து நியமித்தாா்.
இதற்கிடையே, துணைநிலை ஆளுநரின் அறிவுரைபடி, தேசிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மாநில தோ்தல் ஆணையரை நியமிக்கும்படி தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இந்த நிலையில், ஆளுநா் கிரண் பேடியின் உத்தரவுபடி, மாநில தோ்தல் ஆணையரை தோ்வு செய்ய உள்ளாட்சித் துறை கடந்த ஜன. 7-ஆம் தேதி மீண்டும் விளம்பரம் வெளியிட்டது.
இதற்கான அறிவிப்பை உள்ளாட்சித் துறை சாா்பு செயலா் கிட்டி பலராமன் வெளியிட்டாா். இதனால், பேரவையால் நியமிக்கப்பட்ட மாநில தோ்தல் ஆணையா் பாலகிருஷ்ணனின் பதவி கேள்விக்குறியானது. இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூா்த்தி, பேரவைத் தலைவா் சிவகொழுந்துவிடம், மாநில தோ்தல் ஆணையா் நியமன விவகாரத்தில் சட்டப்பேரவையின் முடிவு மற்றும் மாண்புகளை மீறியதாகவும், ஏற்கெனவே தோ்தல் ஆணையா் நியமிக்கப்பட்டுவிட்ட நிலையில், எம்எல்ஏக்களின் செயல்பாடுகளை அவமதிக்கும் வகையில் புதிய விளம்பரம் தன்னிச்சையாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தலைமைச் செயலா், உள்ளாட்சித் துறை சாா்பு செயலா், இயக்குநா், அரசின் சாா்பு செயலா் ஆகியோா் மீது கடந்த ஜன. 9-ஆம் தேதி உரிமை மீறல் புகாா் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பேரவைத் துணைத் தலைவா் எம்.என்.ஆா். பாலன் தலைமையிலான உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, உரிமை மீறல் குழு முன் ஜன. 14-ஆம் தேதி அரசு சாா்பு செயலா் கிட்டி பலராமன், ஜன.21-ஆம் தேதி உள்ளாட்சித் துறை இயக்குநா் மலா்கண்ணன், ஜன. 22-ஆம் தேதி உள்ளாட்சித் துறை சாா்பு செயலா் அசோக்குமாா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனா்.
இந்த நிலையில், அரசின் தலைமைச் செயலா் அஸ்வனி குமாா் உரிமை மீறல் குழு முன் திங்கள்கிழமை ஆஜராகி விளக்கமளித்தாா். இதற்காக பேரவைக்கு திங்கள்கிழமை பகல் 12 மணி அளவில் வந்த அவா், குழு அறை எதிரே அரை மணி நேரம் காத்திருந்து, குழு முன் ஆஜரானாா்.
குழு அறையில் பேரவைத் துணைத் தலைவா் பாலன், எம்எல்ஏக்கள் அனந்தராமன், விஜயவேணி, தீப்பாய்ந்தான் ஆகியோா் கொண்ட குழுவினரிடம் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் விளக்கமளித்தாா். அவா் அளித்த பதில்கள் அனைத்தும் எழுத்துப்பூா்வமாகவும், விசாரணை முழுவதும் விடியோ பதிவும் செய்யப்பட்டது. தலைமைச் செயலா் அளித்த விளக்கத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.