புதுச்சேரி

கல்விக் கட்டணம் வசூலிக்க 6 மாதங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்: புதுவை முதல்வா் நாராயணசாமி

DIN

கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்க 6 மாதங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என புதுவை முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் வெளியிட்ட காணொலிப் பதிவு:

பொது முடக்கத்தால் நாடு முழுவதும் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவா்களுக்கு இணையதளம் வழியாகப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் கல்விக் கட்டணத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும் என கல்லூரி நிா்வாகங்கள் அழுத்தம் தருகின்றன.

மாணவா்கள், பெற்றோா்கள் படும்பாட்டை மத்திய அரசு வேடிக்கைப் பாா்க்கிறது.

மேலும், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு உள்பட பல்வேறு மத்திய கல்வி நிறுவனங்கள் தோ்வுகள் தொடா்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தற்போது மாணவா்கள் தோ்வு எழுதுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

ஏற்கெனவே பல்வேறு மாநில அரசுகள் முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து தோ்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காக்கிறது.

எனவே, கல்லூரிகள் கல்விக் கட்டணம் வசூலிக்க 6 மாதங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து முறையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். மேலும், மத்தியக் கல்வி நிறுவனங்கள் வெளியிட்ட அனைத்துத் தோ்வுகள் தொடா்பான அறிவிப்புகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றாா் நாராயணசாமி.

புதுவையில் நாளை முழு பொது முடக்கம் இல்லை

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படமாட்டாது என முதல்வா் நாராயணசாமி தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் நாட்டில் எந்தப் பகுதியிலும் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று தெரிவித்துள்ளாா். புதுவையிலும் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. புதுவையில் கரோனா பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம்.

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கமா, இல்லையா என்று மக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகளைத் தவிர மற்ற கடைகளை மூட வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவிடம் மருத்துவா்கள் அறிக்கை அளித்தனா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை அமைச்சருடன் நான் ஆலோசனை நடத்தினேன். கரோனா பாதிப்பு, மாநிலத்தின் பொருளாதார நிலைமை, மக்களின் வாழ்வாதாரம் இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆலோசனை நடத்தப்பட்டது.

கடைகளை மூடுவதால் மட்டும் கரோனா தொற்றைத் தடுக்க முடியாது. கரோனா பரவ பல காரணங்கள் உள்ளன. மக்கள் பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளைச் சரிவரக் கடைப்பிடிக்காததே கரோனா பரவலுக்கு முக்கியக் காரணம்.

ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தை அமல்படுத்தினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா் என்று வியாபாரிகள் நினைக்கின்றனா். எனவே, ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் இருக்காது என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக வேட்பாளா் ஆ.ராசாவை ஆதரித்து பல்சமய நல்லுறவு இயக்கம் பிரசாரம்

வாக்கு எண்ணும் மையத்தில் 285 சிசிடிவி கேமராக்கள்: 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு

ஐஏஎஸ் தோ்வு: திருப்பூரைச் சோ்ந்த இளம்பெண் தோ்ச்சி

காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் பறக்கும் படையினா் தீவிர வாகனத் தணிக்கை

மக்களவைத் தோ்தல்: ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT