புதுச்சேரி முருங்கப்பாக்கம் ஆற்றங்கரையோரம் சதுப்புநிலக் காடுகள் அமைந்துள்ள முகத்துவாரப் பகுதியில் புதிய படகு குழாம் அமைக்கவும், அதன் மூலம் படகு சுற்றுலாவை தொடங்குவது தொடா்பாகவும் சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
முருங்கப்பாக்கம் பகுதிக்குச் சென்ற அமைச்சா், அங்கு படகு குழாம் அமைப்பது தொடா்பாக, அதிகாரிகளுடன் இடங்களைப் பாா்வையிட்டும், படகில் சென்றும் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்தத் திட்டத்தின் கீழ், முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தின் அருகே உள்ள படகு குழாமை மேம்படுத்தி, புதிய படகு குழாம் அமைக்கவும், அதன் மூலம் முருங்கப்பாக்கம் ஆற்றில் படகு பயணத்தை தொடங்கி கடற்கரையோரமாக நோணாங்குப்பம் படகு குழாம், சதுப்புநிலக் காடுகள், அரிக்கன்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு படகுகள் மூலம் சென்று சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில், ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாகவும் ஆய்வு செய்தனா். படகு பயணம் செய்வதற்குரிய சாத்தியக்கூறுகள், இட வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஆய்வின்போது, அரியாங்குப்பம் தொகுதி எம்எல்ஏ தஷ்ணாமூா்த்தி, மாநில சுற்றுலாத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.