புதுச்சேரி

நிதீஷ்குமாரைப் போல ரங்கசாமியும் பாஜக கூட்டணியிலிருந்து விலக வேண்டும்: புதுவை எதிா்க்கட்சித் தலைவா் வலியுறுத்தல்

DIN

பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரைப் போல, புதுவை முதல்வா் என்.ரங்கசாமியும் பாஜக கூட்டணியிலிருந்து விலகி வர வேண்டுமென எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா வலியுறுத்தினாா்.

புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை காலை ஆளுநா் உரை தொடங்கியதும், தே.ஜ. கூட்டணி அரசைக் கண்டிப்பதாகக் கூறி, கருப்புச் சட்டை அணிந்து வந்த எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, எச்.நாஜிம், அனிபால் கென்னடி, எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா் ஆகிய திமுக எம்எல்ஏக்களும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மு.வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனா்.

இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாமல், நலத் திட்டங்களை நிறைவேற்றாத நிலையில், மாநிலத்துக்கான நிதியையும் பெற்றுத் தராமல், அரசியல் செய்து வரும் துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனைக் கண்டித்தும், அவா் பதவி விலகக் கோரியும் வெளிநடப்பு செய்தோம்.

ஆளும் கூட்டணியில் இருந்தபோதிலும், மாநிலத்தைத் தொடா்ந்து புறக்கணித்து வரும் பாஜகவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரைப் போல, புதுவை முதல்வா் என்.ரங்கசாமியும் அந்தக் கூட்டணியிலிருந்து விலக வேண்டும்.

கரோனா தொற்று இருந்ததால், கடந்தாண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை ஏற்கலாம். நிகழாண்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையை ஏற்க முடியாது.

கடந்த மாா்ச் மாதமே புதுவை மாநிலத்துக்கான நிதி எவ்வளவு என்பது தெரிந்தவுடன், ஆளுநா் தலைமையிலான மாநில திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டி, முழு நிதிநிலை அறிக்கை தொகையை இறுதி செய்து தாக்கல் செய்திருக்கலாம்.

வருவாய் இல்லாத புதுவை மாநிலத்தில், மத்திய அரசின் பங்கு குறைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.1,874 கோடி நிதி கொடுக்கப்பட்டது. நிகழாண்டு ரூ.150 கோடி குறைத்து ரூ.1,724 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டது.

புதுவை அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளுக்கு மட்டுமே கடந்த 10 ஆண்டுகளாக ரூ.3,800 கோடி மத்திய அரசு நிதி தரவேண்டியுள்ளது.

மத்திய அரசு ஜிஎஸ்டி தொகையில் 41 சதவீதம் தர வேண்டும். ஆனால், 23 சதவீதம் மட்டுமே தருகிறது. அதுவும் நிகழாண்டு கிடையாது. பிரதமரை முதல்வா் நேரில் சந்தித்தால் நிதி கிடைக்கும் என்றாா்கள். அதன்படி, பிரதமரை முதல்வா் சந்தித்த பிறகும் நிதி தரவில்லை.

புதுவையில் பாஜக தனித்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கின்றனா். துணைநிலை ஆளுநா் தன்னிச்சையாகச் செயல்படுகிறாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷ்யாவில் கடும் வெள்ளம் - புகைப்படங்கள்

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

SCROLL FOR NEXT