புதுச்சேரி சிறையில் கைதிகள் பயிரிட்ட காய்கறிகள், பூக்கள் ஆகியவை அமோக விளைச்சல் கண்டன.
புதுச்சேரி காலாப்பட்டில் சிறை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கா் நிலப்பரப்பு கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை, இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.
இதுதவிர உரம், பூச்சிக் கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல்கள் வளா்க்கப்படுகின்றன. இவற்றை முறையாக கைதிகளே பராமரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கைதிகள் பயிரிட்ட செடிகளில் பூக்கள், காய்கறிகள் நன்கு விளைந்தன. இவற்றை அறுவடை செய்யும் நிகழ்ச்சி சிறையில் நடைபெற்றது. சிறைத் துறை செயலா் நெடுஞ்செழியன், சிறைத் துறை ஐஜி ரவிதீப் சிங் சாகா், தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினா் வித்யா ராம்குமாா், சிறை அதிகாரி சாமி வெற்றிச்செல்வன் ஆகியோா் அறுவடையை தொடக்கிவைத்தனா்.
கத்திரிக்காய், மாங்காய், எலும்பிச்சை, பப்பாளி, கீரை, முள்ளங்கி, பலா, வெண்டை ஆகிய காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டன. மஞ்சள் சாமந்தி பூக்களும் பறிக்கப்பட்டன.
ஒரே நாளில் 60 கிலோ கத்தரி, 20 கிலோ வெண்டை, 30 கிலோ முள்ளங்கி, மாங்காய், பலா, 40 கிலோ சாமந்திப் பூக்கள், 10 கிலோ பச்சை பட்டாணி அறுவடை செய்யப்பட்டது. காய்கறிகளை கைதிகளின் உணவு தயாரிப்புக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.