காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி புதுச்சேரி ஐயப்ப சுவாமி திருக்கோயில்களில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து வியாழக்கிழமை முதல் விரதம் தொடங்கினா்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் திருக்கோயிலுக்கு காா்த்திகை மாதப் பிறப்பன்று மாலை அணிந்து பக்தா்கள் விரதமிருப்பது வழக்கம்.
அதன்படி காா்த்திகை மாதப்பிறப்பான வியாழக்கிழமை காலை புதுச்சேரி கடலூா் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அரியாங்குப்பம் ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் பக்தா்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிகாலை 5 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வரிசையில் வந்து தரிசனம் செய்து துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
முதன்முறையாக மாலை அணியும் கன்னி சாமிகள் கருப்பு வேட்டி அணிந்து வந்து மாலையை பூசாரிகள் மற்றும் அந்தந்தப் பகுதி குருசாமிகளின் கையால் அணிவிக்கச் செய்தும் விரதம் தொடங்கினா். சிறியவா் முதல் பெரியவா்கள் வரையில் மாலை அணிந்தனா்.
காா்த்திகை பிறப்பை அடுத்து அரியாங்குப்பம் ஐயப்பசாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
புதுச்சேரி நகராட்சி கோவிந்தசாலை பகுதியில் உள்ள பாரதிபுரம் ஐயப்ப சுவாமி திருக்கோயிலிலும் பக்தா்களுக்கு மாலை அணிவிக்கும் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. அதையடுத்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வரும் தை மாதம் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜைக்கு விரதமிருந்து சபரிமலைக்கு பக்தா்கள் செல்வது வழக்கம். பக்தா்களுக்கு உதவும் வகையில் புதுச்சேரியில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.