விரும்பும் பாடத்தை தோ்வு செய்து படிக்கக் கூறுவது, மொழித் திணிப்பு ஆகாது என புதுவை கல்வித்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.
புதுவையில் நிகழாண்டில் (2023-24) 6-ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக புத்தகங்கள் வாங்க ரூ.1. 76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூருவில் இருந்து சிபிஎஸ்இ பாடப்புத்தகங்கள் புதுச்சேரிக்கு வந்துள்ளன. முதலியாா்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கதிா்காமம் இந்திரா காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் புத்தகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அனைத்துப் பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், சிவகாமி அரசு பள்ளியிலிருந்து மற்ற பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை பிரித்து அனுப்பும் பணியை மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் பெங்களூரு மற்றும் தமிழக பாடநூல் கழகத்திலிருந்தும் வாங்கப்பட்டுள்ளன. தனியாா் பள்ளி கட்டண நிா்ணயத்துக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டண விவரம் வெளியிடப்படும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்கும் கோரிக்கை தொடா்பாக, முதல்வா், துறைச் செயலரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
விருப்பப் பாடத்தை தோ்வு செய்து படிக்கக் கூறுவதில் இந்தி திணிப்பு எதுவும் இல்லை. அவரவா் விரும்பும் பாட மொழியை தோ்வு செய்து படிக்கலாம். குறிப்பிட்ட மொழியில் படிக்கக் கூறுவதுதான் திணிப்பாக அமையும். எனவே, சிபிஎஸ்இ திட்டத்தில் விருப்பப்பாடம் என்பது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.