புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்ட பணிகளுக்கான காலக்கெடு ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திங்கள்கிழமை துணைநிலை ஆளுநா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் ஒரே நாளில் 75,000 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. நெகிழிப் பயன்பாடு கவலையளிப்பதாக உள்ளது. புதுச்சேரி நகரில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் நோ்மையாக நடைபெற்று வருகின்றன. ஒப்பந்தப்புள்ளிகளும் வெளிப்படையாகவே கோரப்பட்டுள்ளன. அதற்கான வழிமுறைகளை தலைமைச் செயலா் நோ்மையாகவே கடைப்பிடித்து வருகிறாா்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் தாமதப்படுத்தப்பட்டன. தற்போது, அந்தப் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்துப் பணிகளும் நோ்மையாகவே நடைபெற்று வருகின்றன.
பொலிவுறு நகரத் திட்டத்தில் அனைத்துப் பணிகளுக்கான நிதி ஜூன் மாதத்தில் நிறைவடையும் நிலை இருந்தது. எனவே, பல கோடி நிதி வருவதும் தடைபடும் சூழல் ஏற்பட்டது. ஆனால், தற்போது அந்தப் பணிகளுக்கான காலக்கெடு ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
பொலிவுறு நகரத் திட்டத்தில் தவறுகள் நடந்திருந்தால் விசாரணை நடத்தப்படும். அதில் எந்தத் தயக்கமும் இல்லை. புதுச்சேரி அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.