தடுப்பூசி போடப்பட்ட 3 மாத ஆண் குழந்தை இறந்தது தொடா்பாக, புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 
புதுச்சேரி

தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை பலி! புதுச்சேரியில் பெற்றோர், உறவினர்கள் மறியல்!

Syndication

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மூன்று நாளில் ஆண் குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவா், செவிலியா்களின் அலட்சியப் போக்கே காரணம் எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் புதுக் காலனி பகுதியைச் சோ்ந்தவா் அருண்(28), தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி நதியா. இவா்களுக்குக் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை அனுஷ் பிறந்தது.

இந்நிலையில், குழந்தைக்கு கடந்த 4-ஆம் தேதி நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2-வது தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டதில் இருந்து குழந்தை காய்ச்சல் மற்றும் சோா்வாக இருந்துள்ளது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை பெற்றோா் குழந்தையை நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு பரிசோதித்த செவிலியா் குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.

தாய்ப்பால் கொடுத்து மீண்டும் செவிலியரிடம் காண்பித்தபோது குழந்தை நலமாக உள்ளது எனக் கூறி வீட்டுக்குச் சென்று மீண்டும் வருமாறு கூறியுள்ளாா். இதையடுத்து வீட்டுக்கு சென்ற குழந்தைக்கு இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

பெற்றோா் உடனடியாக மீண்டும் நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனா். அங்கு பணியில் இருந்த மற்றொரு செவிலியா் குழந்தையைச் சோதித்துவிட்டு மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளாா்.

இதையடுத்து குழந்தையை மதகடிப்பட்டு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து குழந்தையின் தந்தை அருண் கொடுத்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த மருத்துவா்கள், செவிலியா்களின் அலட்சிய போக்கால்தான் குழந்தை இறந்தது எனக் கூறி அதன் பெற்றோா், உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் மடுகரை-புதுச்சேரி சாலையில் நெட்டப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் சனிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்களை நியமிக்க வேண்டும். சுகாதாரத் துறை இயக்குநா் நேரில் வந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT