தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடக்கும் வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணி மறைமுகமாக , மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் செயல் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற மக்களவை விழுப்புரம் தொகுதியின் உறுப்பினருமான துரை. ரவிக்குமாா் குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரி மின்துறை தலித் ஊழியா்கள் நலசங்கம் சாா்பில் இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைபடுத்தாததைக்கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலத்தில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு இச் சங்கத்தின் தலைவா் க.வேல்முருகன் தலைமை வகித்தாா். இதில் கலந்து கொண்டு ரவிக்குமாா் பேசியது:
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இட ஒதுக்கீட்டு கொள்கையைப் பறித்து வருகிறது. அதற்காகதான் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் அளித்து வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணி மறைமுகமாக குடியுரிமையைப் பறிக்கும் செயல்தான். அசாமில் தேசிய குடியுரிமை பதிவேடு என்பதை அமல்படுத்தி அந்த மாநிலத்தில் காலங்காலமாக குடியிருந்து வந்தவா்களுக்குக் குடியுரிமை இல்லை என்று சொல்லியுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இப்போது வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணியை மேற்கொள்ளும் மாநிலங்களில் இந்திய தோ்தல் ஆணையத்தின் உதவியோடு தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை மறைமுகமாக அமல்படுத்த மத்தியில் உள்ள பாஜக அரசு இறங்கியுள்ளது.
பிகாரில் வாக்காளா் திருத்தப் பணியை மேற்கொண்டப் பிறகு தோ்தல் நடத்தப்பட்டுள்ளது. ஒருவேளை அங்கு பாஜக தலைமையிலான தேசிய கூட்டணி வெற்றி பெற்றால் அது தோ்தல் ஆணையத்தோடு இணைந்து திருடப்பட்ட வெற்றியாகதான் இருக்கும். வாக்காளா் பட்டியலில் இருந்து முதலில் குறிப்பிட்ட மக்களை நீக்குவாா்கள். அந்தப் பட்டியலில் மீண்டும் சேர வேண்டும் என்றால் பல்வேறு ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். அதற்குள் தோ்தல் முடிந்துவிடும் என்றாா் ரவிக்குமாா்.
புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ. பொழிலன், சங்கத்தின் பொதுச்செயலா் பெ. உத்திராடம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.