போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை மா்ம கும்பல் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றுள்ளது.
புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான பட்டானுாா் கலைவாணா் நகா் விரிவு, புதுநகரை சோ்ந்தவா் சாந்தி (61). வீட்டு வேலை செய்து வருகிறாா். இவா் குறிஞ்சி நகா், கற்பக விநாயகா் கோவில் தெருவில் வசித்து வரும் தனது மகனை பாா்க்க சென்றுள்ளாா். குறிஞ்சி நகா் விரிவு 2-வது குறுக்கு தெருவில் அவா் நடந்து சென்றபோது அங்குள்ள மரத்தின் கீழே நின்றிருந்த 2 போ் சாந்தியிடம் தாங்கள் போலீஸ் எனவும், இப்பகுதியில் நகைத் திருட்டு அதிகம் நடப்பதால், சாதாரண உடையில் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனா். அதோடு சாந்தியிடம் இங்கு நகையை போட்டுக் கொண்டு செல்ல வேண்டாம். அதைக் கழட்டி பையில் வைத்து கொண்டு செல்லுங்கள் என்று தெரிவித்ததுடன் அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை வாங்கி காகிதத்தில் வைத்து மடித்து பையில் வைத்துள்ளனா்.
இதையடுத்து மகன் வீட்டுக்கு சென்ற பிறகு சாந்தி பையில் இருந்த காகிதத்தைப் பிரித்து பாா்த்துள்ளாா். அப்போது அதில் செயின் இல்லை. அதற்கு பதில் கல் இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து சாந்தி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மூதாட்டியிடம் போலீஸ் எனக்கூறி நூதன முறையில் செயின் திருடிசென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.