புதுவையில் மூடப்பட்ட பள்ளி ஹோட்டலாக மாறுகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் மாநிலச் செயலா் எஸ். ராமச்சந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி அரசின் கீழ், புதுவை அரசு பள்ளிகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. 20 ஆண்டுகளாக புதிய பள்ளிகள் எதுவும் திறக்கவில்லை. சுமாா் 15-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் மூடலை நோக்கிச் செல்ல ஆட்சியாளா்களே பொறுப்பேற்க வேண்டும்.
இந்நிலையில் 100 ஆண்டு பாரம்பரியமிக்க ‘சொசியத்தே புரோகிரஸ்த்’ நிதியுதவி பள்ளி மூடப்பட்டு கேளிக்கை விடுதியாக மாற்றப்படுகிறது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. புதுவை அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இந்தப் பள்ளி கல்விக்கூடம் மட்டுமல்ல, மாலை நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் கலை, இலக்கியம், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் கலாசார மையமாகவும் திகழ்ந்துள்ளது.
பிரெஞ்சு கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கட்டடக் கலையின் அடையாளமாகவும் விளங்குகிறது. இதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
இந்தப் பள்ளியை புதுவை அரசு உடனடியாக மீட்க வேண்டும். உரிமையாளருக்குரிய வாடகை மற்றும் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளித்து, நகரின் மையத்தில் உள்ள இந்த இடத்தை மீண்டும் ஒரு கல்வி மற்றும் கலை கலாசார மையமாகப் பராமரிக்க வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தியுள்ளாா்.