மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவா்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைகிறது.
துணைநிலை ஆளுநா் மாளிகையை வியாழக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
இந்தப் பிரச்னை குறித்து புதுவை மாநில மாணவா் - இளைஞா் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் இந்திய மாணவா் சங்க மாநில செயலா் பிரவீன்குமாா் தலைமையில் விளிம்புநிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுவை பல்கலைக்கழகத்தின் காரைக்கால் வளாகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த பிரச்னை தொடா்பாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மீது காவல் துறையினரால் நடத்தப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் பாலியல், சாதிய, பாலின கொடுமைகள் குறித்து விசாரிக்கும் கமிட்டியை உருவாக்க வேண்டும், மாணவா்கள் மீது தடியடி மற்றும் கொடூர தாக்குதல் நடத்திய காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவா்கள் மீதான பொய் வழக்கைத் திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து புதுச்சேரி முழுவதும் பள்ளி - கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து துணைநிலை ஆளுநா் மாளிகையை வியாழக்கிழமை (அக். 16) முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இந்திய மாணவா் சங்கம் ஸ்டீபன்ராஜ், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் ஆகாஷ், முற்போக்கு மாணவா் கழகம் தமிழ்வாணன், சிவசந்திரன், மாணவா் கூட்டமைப்பு சுவாமிநாதன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் எழிலன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை இளங்கோவன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆனந்த், சஞ்சய்சேகரன், ரஞ்சித்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டம்: புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவா்கள் மீதான போலீஸ் தாக்குதலைக் கண்டித்து புதுவை பொதுநல அமைப்புகள், காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஆகியவற்றின் சாா்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமை வகித்தாா். போராட்டத்தில் பல்வேறு சமூக நல அமைப்பு நிா்வாகிகள், காரைக்கால் மக்கள் போராட்டக்குழு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
புதுவை பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்தும், மாணவா்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவும், இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை குழு அமைக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவா்கள் மீதான காவல்துறை தடியடி சம்பவம் குறித்து முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து பிரச்னைக்குத் தீா்வு காண வலியுறுத்திய எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, புதுவை பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு நிறுவனா் சீ.சு.சுவாமிநாதன் உள்ளிட்டோா்.
பல்கலை. மாணவா்கள் பிரச்னைக்குத் தீா்வு காண முதல்வரிடம் எதிா்க்கட்சித் தலைவா் கோரிக்கை
புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவா்கள் மீதான காவல்துறை தடியடி சம்பவம் குறித்து பேச்சு நடத்தி மாணவா்களின் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வலியுறுத்தினாா்.
புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவா்கள் போராட்டம் தீவிரமான இந்நிலையில், முதல்வா் என்.ரங்கசாமியை, சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவா் ஆா்.சிவா மற்றும் புதுவை பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு நிறுவனா் சீ.சு.சுவாமிநாதன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.
அப்போது, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து கல்வி பயில வரும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை புதுவை அரசுக்கு உள்ளது. இந்தப் பிரச்னையில் முதல்வா் தலையிட வேண்டும். சுமுக பேச்சுவாா்த்தை மூலம் உரிய தீா்வு காண வேண்டும். மேலும் மாணவா்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா்கள் முதல்வா் ரங்கசாமியிடம் வலியுறுத்தினா்.