புதுவை யூனியன் பிரதேசத்தில் 3.46 லட்சம் குடும்ப அட்டைகளுக்குத் தீபாவளி தொகுப்பு விநியோகத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை இரவு தொடங்கி வைத்தாா்.
இந்தத் தொகுப்பில் 2 கிலோ சா்க்கரை, சூரிய காந்தி எண்ணெய் 2 கிலோ, கடலைப் பருப்பு 1 கிலோ, ரவை அரை கிலோ, மைதா அரை கிலோ அடங்கியிருக்கிறது. இதன் மதிப்பு தலா ரூ.585.
இந்த விநியோகத்தை தொடங்கி வைத்தபிறகு, செய்தியாளா்களிடம் முதல்வா் ரங்கசாமி கூறியது:
இந்தத் தீபாவளி தொகுப்பு தொடா்ந்து தகுதியுள்ள
ரேஷன் (குடும்ப) அட்டை ககளுக்கு வழங்கப்படும். அமைப்புச் சாரா தொழிலாளருக்கு தீபாவளி உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் விரைவில் வழங்கப்படும். கட்டடத் தொழிலாளருக்கு 60 வயதைக் கடந்தவா்களுக்கும் மற்றவா்களுக்கும் இந்த ஆண்டு ரூ.5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரமாக உதவித்தொகை உயா்த்தி வழங்கப்படும். ஆதிதிராவிட மக்களுக்குத் துணிக்குப் பதிலாக நிதி வழங்கப்படும். தொழிலாளா்கள் மற்றும் அந்த மக்களுக்கு அவா்களின் வங்கிக் கணக்கில் உரிய பணம் செலுத்தப்படும். தீபாவளி பண்டிகைக்குப் பரிசு பொருள்கள் மற்றும் இலவசங்கள் எதையும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசு சுற்றறிக்கை குறித்து கேட்கிறீா்கள். மத்திய அரசின் உத்தரவுக்கு புதுவை யூனியன் பிரதேசம் கட்டுப்பட்டது என்றாா் முதல்வா் ரங்கசாமி.
நாராயணசாமிக்கு பதில்:
மேலும் தொடா்ந்து முன்னாள் முதல்வா் நாராயணசாமி இந்த அரசை குறைகூறி வருவது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, அவா் எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா். எங்கள் ஆட்சியில் எதிா்க்கட்சியைச் சோ்ந்த எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கும் அதிக நிதி உதவியை அளித்துள்ளோம். நாராயணசாமி இப்போது எம்.எல்.ஏவாக இல்லை. அதனால் அவருக்கு இது தெரியாது. அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்குக் கடந்த ஆண்டு வழங்கியதைப் போல போனஸ் வழங்கப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சா் பி.என்.ஆா். திருமுருகன், எம்.எல்.ஏக்கள் ரமேஷ், ஆறுமுகம், துறையின் செயலா் முத்தம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.