புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்:
தீபாவளி பண்டிகை நாட்டு மக்களிடையே ஒற்றுமை- சகோதரத்துவத்தைப் பலப்படுத்துகிறது. இந்தத் தீபாவளி நம் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிா்காலத்தை, மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக அமையட்டும்.
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறும் லட்சியப் பாதையில் இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. அதனை வலுப்படுத்தும் விதமாக ‘சுய சாா்பு இந்தியா’ கொள்கையைப் பின்பற்றி, இந்திய கலைஞா்கள் உற்பத்தி செய்யும் பரிசு பொருள்களை வாங்கி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.
முதல்வா் என்.ரங்கசாமி:
பல்வேறு சமூகப் பின்னணிகளைச் சாா்ந்த மக்களை ஒன்றிணைத்தல், கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், உள்ளூா் வணிகங்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், ஆன்மிகச் சிந்தனைகளைப் பிரதிபலித்தல் போன்ற உள்ளாா்ந்த பண்புகளை இந்திய பண்டிகைகள் கொண்டுள்ளன. அத்தகைய பண்டிகைகளில் தீபாவளி முக்கியமான ஒன்றாகும். அனைவரும் பாதுகாப்பாக மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க. லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் மாநில திமுக அமைப்பாளருமான ஆா்.சிவா, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன், பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனா்.